
நாட்டில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள் : பதுளை மாவட்டச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
நாட்டில் தொடர்ச்சியாக அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
பதுளை மாவட்டச் செயலகத்திற்கு இன்று புதன்கிழமை காலை 9:24 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால் வளாகத்தில் குண்டு இருப்பதாகக் கூறி ஊழியர்களை வெளியேற்றுமாறு அதில் கோரப்பட்டிருந்தது. உதவித் தொழில் ஆணையாளர் சுஜாதா குமாரி இது குறித்துப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி கண்டி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மிரட்டலில், செயலக வளாகத்தில் உள்ள வாகனம் ஒன்றில் குண்டு பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 26ஆம் திகதி காலை 10 மணியளவில் மோப்ப நாய்கள் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அங்கு குவிக்கப்பட்டனர். பிரதான நுழைவாயில் மூடப்பட்டதால் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்க நேரிட்டது.
வாகனங்களுடன் வந்த ஊழியர்கள் அனைவரும் வாகனங்களுக்கு அருகிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுச் சோதனையிடப்பட்டனர்.
மேலும் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி நாவலபிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையிலுள்ள வெளிநாட்டு கூடாரம் ஒன்றிற்குள் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறப்படும் அந்த மின்னஞ்சலில், 29ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் இந்த சம்பவங்களில் வெடிகுண்டுகள் எவையும் மீட்கப்படவில்லை. இதனால் இந்த திட்டமிட்ட போலி மின்னஞ்சல்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
