நாட்டில் எரிபொருள் நிலவரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

அடுத்த பெற்றோல் கப்பல் எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நிற்க வேண்டாம்

முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துபவர்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும்.

எவ்வாறாயினும், நாட்டில் போதியளவு டீசல் கையிருப்பு இருப்பதனால் தற்போது அதற்கு அதிக தேவை ஏற்படாது.

இதேவேளை, தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தேவையான எரிபொருளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது, என அமைச்சர் தெரிவித்தார்.