நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்ற புனித ஹஜ் பெருநாள் நிகழ்வுகள்!

-அம்பாறை நிருபர்-

புனித ஹஜ் பெருநாள் தொழுகை அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று   வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை இநிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.

மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .

இதே வேளை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூதா ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக இடம்பெற்று முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

 

-மன்னார் நிருபர்-

 

இஸ்லாமியர்களால் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை மன்னாரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

இவ் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

-கிண்ணியா நிருபர்-

 

திருகோணமலை- முள்ளிப்பொத்தானை ஈச்ச நகர் பொது விளையாட்டு மைதானத்திலும் இன்று வியாழக்கிழமை ஹஜ் பெரு நாள் திடல் தொழுகை இடம் பெற்றது.

முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் குறித்த பள்ளிவாயலின் பேஷ் இமாம் விசேட பயான் உரை நிகழ்த்தினார்.

இதில் பெரும்பாலான ஆண்கள், பெண்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதுடன் தொழுகையின் பின் தங்களது சகோதரத்துவத்துவம்,  ஒற்றுமை, அன்பை பகிர்ந்து கொண்டு முஷாபகா செய்து கொண்டார்கள்.