
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தைப்பொங்கலன்று மழையுடனான வானிலை!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனிடையே, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் நாளை காலை பனியுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
