நாட்டின் தேசிய பாதுகாப்பு எங்கு செல்கிறது? – எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச கேள்வி!

மாத்தறை – வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையை அடிப்படையாக கொண்டு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச உள்ளிட்ட உறுப்பினர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாட்டில் பாரிய அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தினத்தன்று பிரதேச சபை தவிசாளர் அவருடைய அறைக்குள் வைத்தே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதி ஒருவர் பொதுமக்கள் தினத்தற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு எங்கு செல்கிறது? அதற்கு என்ன நடந்துள்ளது? என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும். குற்றங்களை நிறுத்துவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் பிரதேச சபை உறுப்பினர்கள் மாத்திரமின்றி, நாட்டின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றங்கள் புரையோடிபோயுள்ள நாடாக நமது நாடு காணப்படுகிறது. அவற்றை இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் தெரிந்தால் நீங்களும் தெரியப்படுத்துங்கள் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.