நாடு முழுவதும் இன்று முதல் மழை : மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்க நிலை உருவாகி வருவதால், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏனைய இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.