
நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
அனுராதபுரத்தின் ரம்பேவா பகுதியில், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது, சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும், என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனத்தை, போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்பட்டதுடன், தவறான கருத்துக்களையும் அங்கு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினரால் கூறப்பட்ட சில கருத்துக்கள் குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அவை சமூகங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் திறன் கொண்டவையா என மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
“நாங்கள் விஐபி இல்லையா?” ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒப்பான சலுகைகள் எனக்கும் வழங்கப்பட வேண்டும், என்று நாடாளுமன்ற உறுப்பினர் போக்குவரத்து பொலிஸ் அதகாரிகளிடம் முரண்படுவதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் அவதானிக்க முடிகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அனுராதபுரம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும், என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
