நாடாளுமன்ற அமர்வில் பேசுபொருளான நோர்வூட் பிரதேச செயலகம்
நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் முன்னதாக காணப்பட்ட ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை நல்லாட்சி அரசாங்கத்தின் போது பத்து பிரதேச செயலக பிரிவுகளாக மீளமைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
தோட்ட மக்கள் வாழும் 35 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி நோர்வூட் பிரதேச செயலகம் நோர்வூட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலகத்தை தற்போது ஹட்டன் பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில், நோர்வூட் பிரதேச செயலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றைய தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்தார்.
இந்த முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்வைத்த பிரேரணையை வழிமொழிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், ஒரு சில அரச உத்தியோகத்தர்களின் நலனுக்காக எந்தவொரு தரப்பினரதும் கருத்துக்களைப் பெறாது, குறித்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக அங்குள்ள 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர் நோர்வூட் பிரதேச செயலகத்தைப் பலப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாகவே நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் எழுத்து மூல கோரிக்கைக்கு அமையவே தற்காலிகமான இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு யோசனையாக மாத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றமானது தற்காலிக யோசனை மாத்திரமே எனத் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றமானது முட்டாள்தனமான முன்மொழிவு என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.