நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 907 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின் போது குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 343 பேரும் இந்த சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை உறுப்பினர்கள் உட்பட 6ஆயிரத்து 129இற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.

சோதனை நடவடிக்கையின் போது, 27ஆயிரத்து 388 பேர் சோதனை செய்யப்பட்டனர். மேலும் 7ஆயிரத்து 509 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9ஆயிரத்து 758 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையின் போது இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது .

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 58 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதோடு, கவனக் குறைவாக வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து குற்றச்சாட்டுக்களின் கீழ் 2ஆயிரத்து 992 நபர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேநேரம் பூஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 11 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்றைய நாளில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1 கிலோ 547 கிராம் ஹெரோயின், 726 கிராம் 107 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .