
நள்ளிரவில் சுரங்க தொடருந்து நிலையத்தில் சத்தியப்பிரமாணம் செய்த ஸோஹ்ரான் மம்தாணி!
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நியூயோர்க் மாநகர முதல்வர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற 34 வயதான ஸோஹ்ரான் மம்தாணி (Zohran Mamdani), நள்ளிரவில் ஒரு சுரங்க தொடருந்து நிலையத்தில் (Subway station) நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார்.
“எங்கள் பிரசாரம் நியூயோர்க் மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, அதே வழியில் நாங்கள் ஆட்சியையும் நடத்துவோம்,” என்று பதவியேற்பு விழாவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு மம்தாணி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.
“நாளை முதல் நாம் நமது பணியை தொடங்குவோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நியூயோர்க் சட்டப்படி, மாநகர முதல்வர்களின் பதவிக்காலம் தேர்தலுக்குப் பின்னர் ஜனவரி 1ஆம் திகதி தொடங்குகிறது.
அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தை நிர்வகிப்பதில் எவ்வித குழப்பமும் இருக்கக்கூடாது என்பதற்காக, நள்ளிரவில் சிறிய பதவியேற்பு விழாவொன்றை நடத்துவது ஒரு பாரம்பரியமாகவே மாறிவிட்டது.
மம்தாணி தனது பதவியேற்புக்காக ‘ஓல்ட் சிட்டி ஹோல்’ (Old City Hall) சுரங்க தொடருந்து நிலையத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த நிலையம் 1945-ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது.
ஆண்டுக்கு சில முறை மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக இது திறக்கப்படும்.
பழமையான கட்டடக்கலை மற்றும் வளைவு வேலைப்பாடுகளைக் கொண்ட இந்த நிலையம், “நகரத்தை அன்றாடம் இயங்க வைக்கும் உழைக்கும் மக்கள் மீதான தனது அர்ப்பணிப்பை” பிரதிபலிப்பதாக மம்தாணியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், நியூயோர்க் நகரின் முதல் முஸ்லிம் முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ள ஸோஹ்ரான் மம்தாணி பதவியேற்பு விழாவின் போது, அவர் திருக்குர்ஆன் மீது கை வைத்துப் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நியூயோர்க்கின் சட்டமா அதிபர் லெட்டிட்டியா ஜேம்ஸ் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிரியாகக் கருதப்படும் லெட்டிட்டியா ஜேம்ஸ் முன்னிலையில் இந்தப் பதவியேற்பு நடைபெற்றமையானது, மம்தாணி ஜனாதிபதியின் பிடியிலிருந்து சுதந்திரமாகச் செயல்படுவார் என்ற செய்தியைத் தனது ஆதரவாளர்களுக்குச் சொல்வதாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, சிட்டி ஹோலுக்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான பொது விழா ஒன்றும் நடைபெறவுள்ளது.
