நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா!

-யாழ் நிருபர்-

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் ஆறு திருமுருகன், தொல்பொருள் திணைக்கள யாழ்ப்பாண உதவி பணிப்பாளர் யு.ஏ.பந்துலஜீவவும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன், நல்லூர் பிரதேச செயலாளர் அ.எழிலரசி, யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்பு விழாவை தொடர்ந்து மந்திரி மனை அரங்கில் நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டது.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் முன்னெடுக்கப்பட்ட முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்