நல்லூரில் நடைபெற்ற மாணவர்களை வலுவூட்டும் ‘பசுமை அறிவொளி’ வேலைத்திட்டம்

-யாழ் நிருபர்-

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மாணவர்களை வலுவூட்டும் ‘பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதம விருந்தினராக வவுனியா பிராந்தியத்தின் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்நிரி ச. சர்வராஜா கலந்துகொண்டிருந்தார், சிறப்பு விருந்தினராகக் கணிய அளவையாளர் ரோகினி ஜெயராம் பங்கேற்றிருந்தார்.

மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் போதித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்கேற்பாளராக்கும் நோக்குடனும், அவர்களில் பல்துறை ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ‘பசுமை அறிவொளி’ நிகழ்ச்சித் திட்டத்தைக் கிராமங்களில் நடாத்தி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் நடைபெற்றுள்ளது.

வரவேற்புரையைப் பசுமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் பா. காசிநாதன் ஆற்ற, நன்றியுரையை பொதுச் செயலாளர் ம. கஜேந்திரன் ஆற்றியிருந்தார், பொருளாளர் க. கேதீஸ்வரநாதனும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வுப் படங்களும், மேற்கோள்களும் பொறிக்கப்பட்டிருந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கான நிதி அனுசரணையைக் கனடாவில் இயங்கிவரும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.