நம்பிக்கையுடன் இருப்போம் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகிறது!

 

-மன்னார் நிருபர்-

ஒவ்வொரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகிறது.குறித்த அமர்வுகளின் போது எனக்கு ஒன்றும் நடப்பது இல்லை. இம்முறையாவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று  சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடரின் அமர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வரும் நிலையில், இது வரை எமது பிரச்சினைகள் தீரவில்லை.

இந்த நிலையிலே நாங்கள் இலங்கை அரசாங்கத்தை நம்பாமல் ஐ.நா சபையை நாங்கள் நம்பி வருகிறோம்.எங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.நிலையான நீதி கிடைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட எங்களுக்கு இவ்வாறான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் நாங்கள் மன நிறைவடைய முடியும்.

நாங்கள் இறந்த உறவுகளை கேட்கவில்லை.நாங்கள் உயிருடன் கொடுத்த பிள்ளைகளையும், உறவுகளையுமே கேட்கின்றோம்.

குறிப்பாக வீடு வீடாகச் சென்று பிடித்தவர்கள், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த எமது உறவுகளையே மீள எங்களிடம் ஒப்படைக்க கேட்கின்றோம்.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் ஆவது எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.அயல் நாடுகள் எங்களுக்காக கதைத்து தீர்வு கிடைக் குமாக இருந்தால் எங்களுக்கு பிரயோசனமாக இருக்கும்.

இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதியில் நின்று போராடுவது?

எமது உறவுகள் உயிரோடு இருந்தால் அவர்களை விடுதலை செய்யுமாறு நாங்கள் கேட்கிறோம்.இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்.

நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம்.நிதிக்காக போராடவில்லை.ஓ.எம்.பி அலுவலகத்தை கொண்டு வந்ததும் ஜெனிவா.ஆனால் அந்த அலுவலகத்தினால் எங்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.

ஓ.எம்.பி அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து வைத்துள்ளார்களே தவிர இதுவரை குறித்த அலுவலகத்தினால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

இதனால் இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் (ஓ.எம்.பி) எங்களுக்கு தேவை இல்லை.

ஜ.நா.மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

உள்நாட்டு பொறிமுறையில் எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

அதன் காரணமாக நாங்கள் சர்வதேசத்திடம் வந்து நிற்கின்றோம்.சர்வதேசம் எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

ஆனால் இன்று சர்வதேசமே எங்களை திரும்பி பார்க்காத நிலையில் கண்ணை மூடிக்கொண்டு உள்ளமை எமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் எமக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போகின்றது.

குறித்த அமர்வுகளின் போது எமக்காக ஒன்றும் நடப்பது இல்லை.இம்முறையாவது காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.என தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்