துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து துனிசியா நோக்கிப் பயணித்த டர்கிஷ் ஏர்லைன்ஸ்
(Turkish Airlines) விமானம் ஒன்று, துனிஸ்-கார்தேஜ் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது கடுமையான காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக தீவிரமான காற்றுக்குலைவை எதிர்கொண்டது. இதனால் விமானத்துக்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறியதுடன், சிலர் தங்களது இருக்கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டனர்.
விமானம் தரையிறங்க முயன்றபோது நிலைமை மேலும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானி மோசமான வானிலைக்கு மத்தியில் விமானத்தை தரையிறக்க மூன்று முறை முயற்சி செய்ததாகவும், ஒவ்வொரு முறையும் கடுமையான காற்றுக்குலைவு ஏற்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது முயற்சியின்போது விமானம் திடீரென கீழ்நோக்கி விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பயணிகள் பலர் மரண பயத்தில் அலறியதாகவும் சம்பவத்தைப் பதிவு செய்த பயணி மரினா மைஸ்காயா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியில், விமானம் கடுமையாக குலுங்கும் நிலையில் பயணிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
நிலைமை ஆபத்தானதாக மாறியதைத் தொடர்ந்து, விமானி துனிஸ்-கார்தேஜ் விமான நிலையத்தில் தரையிறக்கும் முயற்சியை கைவிட்டு, சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அன்பிதா – ஹம்மாமத்(Enfidha-Hammamet) சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னர் பயணிகள் நிம்மதியடைந்து விமானிகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையிலும் தொடர்ந்து பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு மாற்று விமான நிலையத்துக்குச் சென்ற விமானிகளின் நடவடிக்கை பாராட்டப்பட்டுள்ளது










