நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல் : தீக்கிரையான கார்கள்

டச்சு கடல் பகுதியில், 3,000 வாகனங்களை ஏற்றி சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் நேரப்படி, கடந்த ஜூலை 25ம் திகதி  நள்ளிரவில் ஃப்ரேமண்டில் ஹைவே (Fremantle Highway) என பெயர் கொண்ட இந்த சரக்கு கப்பலில் தீ பிடித்துள்ளது.

கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கப்பலில் தீ பிடித்த சமயத்தில் 25 பேர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இருந்துள்ளனர். கப்பல் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. கப்பலில் தீ பிடித்ததை அறிந்ததும் ஆரம்பத்தில் தீயை அணைக்க முயன்றவர்கள், பின்னர் அது முடியாது என தெரிந்ததும் கப்பலில் இருந்த உயிர் பாதுகாப்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களில் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

சிலர் கடலில் குதித்து உயிர் தப்பிய நிலையில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த மாலுமி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்து விட்டதாகவும், அவர் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

தீயில் சிக்கி இருக்கும் ஃப்ரேமண்டில் ஹைவே கப்பலில் கிட்டத்தட்ட 3,000 கார்கள் உள்ளதாகவும், இதில் எலக்ட்ரிக் கார்களும் உள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல் எரிவதால் அந்தப் பகுதியில் கடல் வளம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

கப்பலை இயக்க முடியாது என நெதர்லாந்து நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்