நடுக்கடலில் சிக்கிய கப்பல் பணியாளர்கள் மீட்பு
தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 பணியாளர்களைஇலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர் .
இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த குழுவினரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த MV INTEGRITY STAR என்ற வர்த்தகக் கப்பல், இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆபத்தில் சிக்கியிருந்தது.
இது தொடர்பில் இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலின் பணியாளர்களை மீட்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, அதற்காக இலங்கை கடற்படையின் ‘சமுத்ரா ‘ கப்பல் அனுப்பப்பட்டது.
ஆபத்தில் சிக்கிய கப்பலில் இருந்த இந்திய, துருக்கி மற்றும் அஸர்பைஜான் நாட்டவர்களைக் கொண்ட 14 பேர் அடங்கிய குழுவினரை பாதுகாப்பாக மீட்க முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட குழுவினர் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை கூறியுள்ளது.
ஆபத்தில் சிக்கிய கப்பல் தொடர்பில், கப்பலின் உரிமையாளர் நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
