
த.வெ.க. தலைவர் விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் – வைகோ
தமிழக வெற்றிக் கழக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றியதைச் சுட்டிக்காட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததற்கு முழு பொறுப்பையும் பொறுப்பேற்க வேண்டிய த.வெ.க. தலைவர் விஜய், தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்து கொண்டது மிக, மிகத் தவறான போக்காகும்.
பொது வாழ்வில் ஆத்தி சூடியைக் கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்து விட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார்.
காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.
75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டைக் கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் தி.மு.க.வை, சற்றும் மான வெட்கமின்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.
இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
