தொழில் கோரும் பட்டதாரிகள்: கேள்வியெழுப்பிய சஜித்

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 20000 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 எஸ்.ரி.ஈ.எம் பட்டதாரிகளையும், 9000 எஸ்.ரி.ஈ.எம் அல்லாத பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குதல், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு, சுங்கத் திணைக்களத்திற்கு, வெளிநாட்டுச் சேவைக்கு, சுற்றுலா கைத்தொழிற்றுறைக்கு மேலும் 3000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

ஆனால், தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாத காரணத்தால் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழில் கோரும் பட்டதாரிகள் எதிர்நோக்கும் தொழில் பிரச்சினை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினார்.

சுனில் ஹதுன்னெத்தி கூறியது போலவும், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது போலவும், தொழில் கோரும் பட்டதாரிகளுக்கு எப்போது நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தால் அவர்கள் போராட்டம் செய்யமாட்டார்கள் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டு தொழில் கோரும் பட்டதாரிகளின் பொற்காலம் என்று தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனினும் அதற்கான எந்தவொரு ஏற்பாடுகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச,

தொழில் வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சரியான காலப் பிரிவு மற்றும் வேலைத்திட்டத்தை அறிவிக்குமாறும் தெரிவித்தார்.