தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டத்திற்கு இ.தே.தோ.தொ.சங்கம் முழுமையான ஆதரவு

-பதுளை நிருபர்-

தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்திற்க்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவு வழங்குவோம், என அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்திருந்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாடு பூராகவும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பை நாள்தோறும் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

எது எவ்வாறாக இருப்பினும் கூட பதவி போதையில் அரசாங்கத்திற்கு காதும் கேட்கவில்லை கண்களும் தெரியவில்லை .

பொருளாதார நெருக்கடியினால் நாடு பாரியதொரு பின்னடைவை கண்ணுற்று இருக்கின்றது என நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் .

வரிசைகள் ஓய்ந்தபாடில்லை சுகாதாரம் கல்வி பெருந்தோட்டமென அனைத்து துறைகளும் பாரியதொரு வீழ்ச்சியை கண்டுள்ளது.

கடனால் ஒரு நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது தொலைநோக்குப் பார்வையும் திறன்பட செயற்பாடும் ஒரு ஆட்சிக்கு மிக முக்கியமானது.

இவ் அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு அழுத்தத்தை தெரிவிக்கும் நோக்குடன் நாளைய தினம் நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு, மலையக மக்களும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், தங்களுடைய முழுமையான ஆதரவை வழங்குகின்றது.

அரசியல் கட்சி தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவோம், என  தெரிவித்தார்