தொலைக்காட்சி பார்ப்பதில் தகராறு : கொலையில் முடிந்த பரிதாபம்!
தமிழ்நாடு-கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கரிஞ்சான்கோடு பகுதியில் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனால் மனைவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கரிஞ்சான்கோடு பகுதியில் வசிக்கும் பழனி என்பவர் கோயில்களுக்கு நேர்ச்சை தொட்டில் மற்றும் ஓம குண்டலத்திற்கான விறகுகள் தயாரிக்கும் மர வேலை தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அதிக மது போதையில் வழக்கம் போல் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் பழனியின் மனைவி கஸ்தூரியின் தம்பி ராஜேந்திரன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்.
கடும் போதையில் வீட்டிற்குள் நுழைந்த பழனி, மைத்துனரிடம் அலைவரிசையை மாற்றி செய்தி அலைவரிசை வைக்குமாறு கூறியிருக்கிறார்.
ஆனால் சுவாரஸ்யமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த மைத்துனர் அலைவரிசையை மாற்ற மறுக்கவே அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் தகாத வார்த்தைகளால் பழனி, மைத்துனரைத் திட்ட அவர் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
தம்பி கோபித்துக் கொண்டு சென்றதால் பதறிய கஸ்தூரி வீட்டிற்கு வெளியே ஓடி வந்து சமாதானப்படுத்தியுள்ளார்.
இதைப் பார்த்து ஆத்திரம் தலைக்கேறிய கணவன் பழனி, இருவரையும் தகாத வார்த்தைகளால் சரமாரியாகத் திட்டியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பழனி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கஸ்தூரியின் இடுப்பில் குத்தியதாகத் தெரிகிறது.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேலதிகச் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்ட சிறு தகராறில் மனைவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.