தொலைக்காட்சி, இணையத்தளங்களில் ஜங்க் ஃபுட் விளம்பரங்களுக்கு பிரித்தானியா தடை

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் குழந்தைகளின் உடல் பருமன் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், துரித உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற ‘ஜங்க் ஃபுட்’ (Junk Foods) விளம்பரங்களுக்கு அந்நாட்டு அரசு அதிரடித் தடையை விதித்துள்ளது.

நேற்று ( 6) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, பகல் நேரத் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மற்றும் இணையத்தளங்களில் ஜங்க் உணவுப் பொருள்களின் விளம்பரங்களைக் காட்சிப்படுத்த முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகள் அதிகம் பார்க்கும் நேரங்களில் இத்தகைய விளம்பரங்கள் வருவதைத் தவிர்க்க இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் தடையின் மூலம் சுமார் 20,000 குழந்தைகள் உடல் பருமன் பிரச்சினையிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவும், ஜங்க் உணவுகள் மீதான கவர்ச்சியைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த தீர்மானம் பொதுச் சுகாதாரக் கொள்கைகளில் ஒரு முக்கிய முன்னேற்றம் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.இருப்பினும், சில சுகாதார ஆர்வலர்கள் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைக்காட்சி மற்றும் இணையத்தள விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், வீதிகளில் உள்ள வெளிப்புற விளம்பரப் பலகைகள் (Outdoor Ads) மற்றும் நிறுவனங்களின் பிராண்டிங் (Branding) நடவடிக்கைகளுக்கு இன்னும் அனுமதி உள்ளது. இது முழுமையான மாற்றத்தைத் தராது” என விமர்சித்துள்ளனர்.

மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பிரித்தானியா எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவு, ஏனைய நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஜங்க் உணவுகளால் ஏற்படும் நீண்டகால சுகாதாரப் பாதிப்புகளைத் தடுக்க இது ஒரு முதற்கட்ட வெற்றியாகக் கருதப்படுகிறது.