தைவான் விவகாரம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட நான்கு முக்கிய விடயங்கள் சீனாவால் “சிவப்புக் கோடுகள்” எனக் கருதப்படுவதாக அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் ஷியே ஃபெங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையிலான இந்த வாரம் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னதாக அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனா–அமெரிக்க உறவுகளில் வர்த்தகம், தைவான் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘பீப்பிள்ஸ் டெய்லி’யில் வெளியிட்ட கட்டுரையில், சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நலன்கள் மீறப்படக்கூடாது என ஷியே ஃபெங் தெரிவித்துள்ளார். தைவான் விவகாரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், அபிவிருத்திப் பாதைகள் மற்றும் அரசியல் அமைப்புகள், அபிவிருத்திக்கான உரிமைகள் ஆகிய நான்கு விடயங்களையும் சீனா “சிவப்புக் கோடுகளாக” கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தைவானை சீனா தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. அதேவேளை, தைவான் தன்னாட்சி நிர்வாகத்துடன் இயங்கி வருகின்றது. தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய கருத்து வேறுபாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைத்தால் இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் என்றும், மோதல் ஏற்பட்டால் இரு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஷியே ஃபெங் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார சமநிலையின்மை மற்றும் கட்டாயத் தொழிலாளர் பயன்பாடு போன்ற விடயங்களை காரணமாகக் கொண்டு சீனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










