தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்
மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும்.
மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது.
உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.
ஒரு வகையில் மனித உடலுக்கு தைராய்டு சுரப்பி ஒரு பேட்டரி போன்றது. ஒருவேளை இந்த சுரப்பி ஹார்மோன்களை குறைவாகவோ கூடுதலாகவோ சுரந்தால் தைராய்டு நோய்க்கான பிரச்சினை உண்டாகிறது என்கிறார் ஆந்திர பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற உள்சுரப்பியியல் நிபுணர் (Endocrinologist) மருத்துவர் பெல்லம் பரணி.
மனித உடலுக்குத் தேவையான அளவு ஹார்மோன் தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படாவிட்டால் இது ஹைப்போ-தைராய்டிசம் (Hypo-thyroidsim) எனப்படுகிறது. சொல்லப்போனால் பொம்மையில் பேட்டரி தீர்ந்து போனது போலத்தான். ஹைபோ-தைராய்டிசம் வந்தால் மனித உடலில் எந்த அளவு ஆற்றலுடன் இயங்க முடியுமா அதை விடக் குறைவாகவே இயங்கும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அயர்ச்சி அடைந்துவிடுவார்கள். ஒருவேளை தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது ஹைப்பர்-தைராய்டிசம் (Hyper-thyroidism) எனப்படுகிறது.
இவர்கள் அதிகளவில் ‘காஃபைன் ‘ எடுத்துக் கொண்டவர்களைப் போன்றவர்கள். அதாவது அதிக பசி, அதிக வியர்வை போன்றவை உண்டாகும்.
மூன்றாவது பாதிப்பு தைராய்டு சுரப்பி வீக்கமடைவது. ‘கழுத்துக் கழலை’ எனும் இந்தக் குறைபாடு ‘Goiter’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. மருந்துகளால் தீர்க்க முடியாவிட்டால் இதற்கு நிச்சயம் அறுவை சிகிச்சை தேவை.
⭕அறிகுறிகள்:
- உடல்பருமன்
- சோம்பல், உடல் தளர்ச்சி, உடல் அயர்ச்சி
- தலைவலி
- அடிக்கடி தூங்கிக் கொண்டே இருத்தல்
- ஞாபக மறதி, மூளை செயல்பாடு குறைதல்
- நடையில் தள்ளாட்டம்
- கை, கால் மதமதப்பு, எரிச்சல்
- மனச்சோர்வு
- குளிர் தாங்கும் தன்மை குறைதல்
- உலர்ந்த தடிமனான தோல்
- வியர்க்கும் தன்மை குறைதல்
- முடி உதிர்தல், முடி வளரும் வேகம் குறைதல்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.
டி3, டி4, டி.எஸ்.எச்.இ சோதனைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம்.
⭕என்ன செய்ய வேண்டும்?
1.முள்ளங்கி, முட்டைகோஸ் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
2.அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
3.மருத்துவரின் ஆலோசனைப் படி தைராக்சின் மாத்திரைகளைக் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
4.காலையில் மறந்து விட்டால் மதியமோ, இரவோ உணவு உட்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
5.தைராக்சின் மாத்திரை சாப்பிடும்போது இரும்புச்சத்து, வயிற்றுப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டாசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாள் ஒரு மாத்திரை எடுக்க மறந்து விட்டால், அடுத்தநாள் இரண்டு மாத்திரை போடலாம்.