
தமிழ்க்கடவுளான முருகன், அசுரர்களை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, கையில் ஏந்திய நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தில், பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூசமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம் வரும் தினம் பெளர்ணமியாகவே இருக்கும்.
தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்?
முருகப் பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேலை பெற்ற தினமே தைப்பூச நாளாக கொண்டாடுகிறோம். வேல் என்பது வெற்றியின் அடையாளம்.. வேல் என்பது ஞானத்தையும் குறிக்குறது. வேலின் கூர்மையான பகுதி போல் அறிவு கூர்மையாக இருக்க வேண்டும், அகன்ற பகுதி போல் ஞானம் பரந்து விரிந்திருக்க வேண்டும், கீழே உள்ள தடி பகுதி போன்று அறிவு ஆழமானதாகவும் இருக்க வேண்டும்.
தைப்பூச விரதம் எப்படி இருக்க வேண்டும்?
ஜனவரி 25-ம் தேதி முழுவதும் தைப்பூசம் வருவதால் காலை முதல் மாலை முருகனை நினைத்து உபவாசம் இருந்து முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது. இதில் காலை, மதியம் இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் மேற்கொண்டு மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. மேலும் தைப்பூச நாளன்று வீட்டில் முருகன் படத்திற்கு மலர் மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும்.
பாயாசம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்யமாக படைத்து முருகனை வழிபடலாம். எதுவும் முடியாதவர்கள் இரண்டு வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து மனதார முருகனை வழிபட்டாலே போதும். அன்றைய தினம் விரதமிருந்து உங்கள் வேண்டுதலை மனமுருகி முருகனிடம் வைத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும். மேலும் வீட்டில் வேல் இருந்தால் வேலுக்கு அபிஷேகம் செய்து வேல் விருத்தம், கந்தர் அலங்காரம் போன்ற பதிங்களை பாராயணம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.
தைப்பூசம் வழிபாடு செய்ய உகந்த நேரம் எது?
இன்று வியாழக்கிழமை 25-ம் திகதி காலை 9.14 மணிக்கே பூச நட்சத்திரம் தொடங்குகிறது. இன்று பௌர்ணமியும் இருப்பதால் இன்றே தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும். எனவே காலை 9.20 முதல் 10.30 மணி வரையிலும் மாலை 6.15 முதல் 7.30 மணி வரையிலும் தைப்பூச வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். காலை முதல் மாலை உபவாசம் இருப்பவர்கள் தைப்பூச வழிபாட்டை முடித்த பிறகு விரத்தை முடித்துக்கொள்ளலாம்.
