தேவாலயத் தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்
கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேச நாட்டு ஜனநாயகப் படைகளின் உறுப்பினர்கள் என, சந்தேகிக்கப்படும் நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலை அடுத்து பல வீடுகள் மற்றும் கடைகளும் எரிக்கப்பட்டன, மேலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கரிட்டாஸ் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவாலயத்தில் பிரார்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது நடந்த தாக்குதலுக்குப் பின்னர் பலர் காணாமல் போயுள்ளனர்.
“கிளர்ச்சியாளர்கள் முக்கியமாக கத்தோலிக்க தேவாலயத்தில் இரவைக் கழித்த கிறிஸ்தவர்களைத் தாக்கினர்,” என்று கோமாண்டாவில் சம்பவ இடத்தில் இருந்த மனித உரிமை ஆர்வலர் கிறிஸ்டோஃப் முன்யண்டெரு தெரிவித்துள்ளார்.
ஒரு சிவில் சமூகத் தலைவர் தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம், தேவாலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது மூன்று எரிந்த உடல்களைக் கண்டெடுத்ததாகவும் மரண எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.