
தேர்தல் முடிவுகள் வெளியான 60 மணித்தியாளங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரிப்பு
அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்ற நிலையில் தேர்தல் முடிவு வெளியான 60 மணி நேரத்தில் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 966 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்தரிப்பதை நீண்ட காலம் கட்டுப்படுத்தும் சிகிச்சை முறை மற்றும் நிரந்தர கருத்தடை குறித்த கேள்விகள், சந்தேகங்கள் தேர்தலுக்குப் பின் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது என அமெரிக்க நாட்டு ஊடக நிறுவனங்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப், தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் கருக்கலைப்பு விதிகளை கடுமையாக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அவரது தேர்தல் பரப்புரையிலும் முக்கிய இடம் பிடித்தது. அதனால் அவரது வெற்றிக்கு பிறகு மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு பின் கருக்கலைப்பு சார்ந்து அமெரிக்காவில் எவ்வாறான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
