
தேர்தல் முடிவுகளை அமைதியாகக் கொண்டாடுமாறு பொலிசார் அறிவுறுத்தல்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எவ்வாறாயினும், அமைதியான முறையில் முடிவுகளைக் கொண்டாடுமாறும், நாடு முழுவதும் ஒழுங்கைப் பேணுவதற்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறும் பொலிசார் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இன்று சனிக்கிழமை மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்ததையடுத்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னரான ஒரு வாரத்திற்குள் வாகனங்கள் மூலமாகவோ அல்லது பாதயாத்திரையாகவோ அனைத்து விதமான பொது ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக தல்துவா தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர். 119, 118, 107 (வடக்குஃகிழக்கு), எண் 111 239 9104 அல்லது 011 202 7149 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
