
தேர்தல் களத்திலிருந்து ஒருவர் விலகி மூவர் போட்டியில் : யார் ஜனாதிபதி என்ற முடிவு நாளை
இலங்கையின் நாடாளுமன்றில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
டளஸ் அழப்பெருமவின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாசவே இன்று முன்மொழிந்தார், அதனை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சர் தினேஸ் குணவர்த்தன முன்மொழிந்தார், அதனை அமைச்சர் மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுர திசாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் முன்மொழிந்தார், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய அதனை வழிமொழிந்தார்.
இதனையடுத்து, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் மற்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க ஆகியோரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்தநிலையில், புதிய ஜனாதிபதி தெரிவுக்காக நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
