
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி: அனுர குமார திசாநாயக்க
-மூதூர் நிருபர்-
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இதனால் என்னோடு போட்டியிடுகின்ற சக ஜனாதிபதி வேட்பாளர்கள் குழப்பமடைந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் புதன்கிழமை இரவு மூதூரில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தென் மாகாணம் உள்ளிட்ட வடக்கு,கிழக்கு பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவானது அதிகரித்துள்ளது.கருத்துக் கணிப்பிலும் எமது கட்சியே முன்னிலையில் உள்ளது.நாம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.நாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கு, தென் மாகாணம் என்று பாராமல் சகலருக்கும் பொதுவான சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இனவாதம் பேசியவர்கள் சஜீத் அணியிலும், ரணில் அணியிலும் காணப்படுகின்றனர்.எமது அணியில் அப்படி யாரும் இல்லை.நாம் பேசாததை பிரச்சார மேடைகளில் பேசி எம்மை மக்களிடமிருந்து பிரிக்கப் பார்க்கின்றனர்.அது ஒரு போதும் மக்களிடத்தில் எடுபடாது.மக்களுக்கு தெரியும்.
நாம் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள்,வியாபாரிகள்,மீனவர்கள் என சகலருக்கும் விமோசனத்தை பெற்றுக் கொடுப்போம்.திருடர்களுக்கு சிறந்த பாடத்தை கற்பித்து இந்த நாட்டை அபிவிருத்தியின் கொண்டு சென்று சகல இன மக்களுக்குமான சிறந்த தேசத்தை கட்டி எழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
