தேசிய பொங்கல் விழாவை காண்பித்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை மூடி மறைத்து விட்டார்கள்

-பதுளை நிருபர்-

தேசிய பொங்கல் விழாவை காண்பித்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை மூடி மறைத்துள்ளார்கள் பொங்கல் விழாவுக்கு முன் மலையகத்தில் சிங்கங்கள் வீரர்கள் என்று சொன்னவர்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக பாரிய அளவில் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்கள். ஆனால் தேசிய பொங்கல் விழாவுக்கு பிறகு சம்பள விடயம் தொடர்பில் எதுவித பேச்சும் இல்லை ” என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதியின் அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சை தெரிவித்தார்.

இவர் பசறை பிரதேச சபையின் நூலக கேட்போர் கூடத்தில், பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட 19 முன்பள்ளிகளின் 375 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1000 ரூபாய் ஒரு நாள் சம்பளம் என்பது ஒரு தனி நபரின் வாழ்வாதாரத்திற்கு போதாத வருமானமாகவே காணப்படுகின்றது.

ஆகையினால் பாராளுமன்றத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் ஒரு நாள் சம்பளம் வேண்டும் என கோரி அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர்.

தேசிய பொங்கல் விழாவிற்கு பின்னர் இவ்விடயம் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.ஆனால் நான் கடந்த முறை ஐ.நா சபைக்கு சென்றிருந்த போது தோட்ட தொழிலாளர்களுக்கு 2 டொலர்கள் அதிகரிக்க அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

அது சம்பந்தமாக பேசுவதற்கு மார்ச் மாதம் என்னை ஐ.நா சபைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ் அரசாங்கமானது தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக எந்த வித நடவடிக்கைகளும் எடுப்பதாக தெரியவில்லை. மக்கள் தற்போது வீதியில் இறங்கி போராட தொடங்கி விட்டார்கள்.

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், ஆளும் கட்சியில் பங்காளிகளாக தற்போது செயல்படுபவர்கள் உடனடியாக சம்பள பிரச்சினை தொடர்பில் பேசி விரிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

இல்லையேல் எதிர்கட்சியான நாம் சர்வதேச உதவியை நாடி சர்வதேசத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுப்போம்” என்று தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதியின் அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சை.