தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்கான பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரியவந்துள்ளது.

இந்த 809 பாடசாலைகளும் பெயரளவில் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் கோபா குழுவில் முன்னிலையான போது இது தெரிய வந்துள்ளது .

கடந்த அரசாங்கத்தின் போது செயற்படுத்தப்பட்ட தேசிய பாடசாலை எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்கும் திட்டம், இராஜாங்க அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்கள் தொடர்பில் 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.