தேசபந்து தென்னகோணுக்கு பிணை!

2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் நடந்த ‘கோட்டா கோ காமா’ போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சாட்சிகளை செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்குமாறு சந்தேகநபருக்கு மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படும் போது விசாரணையில் உதவ வேண்டும் என்றும், அத்தகைய அழைப்பைத் தவிர்க்கும் பட்சத்தில், பிணை ரத்து செய்யப்பட்டு, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.