
தேங்காய் எண்ணையில் கலப்படம் செய்த 05 வியாபார நிலைய உரிமையாளர்கள்
-அம்பாறை நிருபர்-
தேங்காய் எண்ணையில் கலப்படம் செய்த, 05 வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு, 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில், உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணையில் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது, நேற்று வியாழக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் போது, ஒவ்வொரு வர்த்தகர்களுக்கும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டு, தண்டணை மற்றும் அபராதம் குறித்து அறிவிப்பதற்காக, எதிர்வரும் மே மாதம் 1 மற்றும் 7 ஆந் திகதி மறுதவணைக்காக வழங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்போது, கல்முனை பிரதேசத்தில் மூன்று வியாபார நிலையங்களிலும், சாய்ந்தமருதில் இரண்டு வியாபார நிலையங்களிலும், விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் எண்ணையில் இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த தேங்காய் எண்ணைய் மாதிரிகள் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, பரிசோதிக்கப்பட்டபோது கலப்படம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வியாபார நிலையங்களுக்கு எதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை, கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, கல்முனை மற்றும் அம்பாறை பகுதிகளில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற வர்த்தகர்களுக்கு, 01 இலட்சம் ரூபா அபராதம் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
