
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரபல கிப்பன் குரங்கு உயிரிழந்தது!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பராமரிப்பில் இருந்த பெறுமதிமிக்க கிப்பன் (Gibbon) வகை குரங்கு ஒன்று உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கிப்பன் குரங்கு, அதன் பெண் துணையுடன் கடந்த 2006ஆம் ஆண்டு செக் குடியரசிலிருந்து (Czech Republic) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த டிசம்பர் 17ஆம் திகதி இந்த குரங்கு திடீரென நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகின்றது.
பின்னர் கால்நடை மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அது உயிரிழந்துள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குரங்கிற்கான மரணப் பரிசோதனை (Post-mortem) ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. எனினும், அது உயிரிழந்தமைக்கான துல்லியமான காரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மத்தியில் இக்குரங்கு மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
