தென்னாப்பிரிக்காவின் கௌட்டெங் மாகாணத்தில் ஒன்பது பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒன்பதாவது பெண்ணின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி டான் பார்க், பாக்ஸ்பர்க்(Dawn Park, Boksburg) பகுதியில் பெண்ணொருவரின் சடலம் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கௌட்டெங் கொலை மற்றும் கொள்ளை விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் Boksburg நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் Ekurhuleni பகுதியில் ஒன்பது பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவங்களுக்கிடையே காணப்படும் சில ஒற்றுமைகள் காரணமாக, இவை தொடர்புடைய கொலைகளா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், அனைத்து சம்பவங்களுக்கும் ஒரே நபர் அல்லது குழுவே காரணம் என இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
தற்போது ஒன்பது கொலை வழக்குகளும் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருவதாக தென்னாப்பிரிக்க பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.










