தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே அமைந்துள்ள எகுர்ஹுலேனி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் பெண்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை 9 பெண்களின் சடலங்கள் ஒரே பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொலைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா, அல்லது ஒரே நபர் அல்லது குழுவினரால் நடத்தப்பட்டவையா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் 20 மற்றும் 30 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலரது உடல்களில் ஒரே மாதிரியான காயங்கள் காணப்பட்டதாகவும், பெரும்பாலான சடலங்கள் ஆடைகள் இல்லாத அல்லது பகுதியளவு ஆடைகளுடன் திறந்தவெளி மற்றும் வீதியோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் நான்கு நாட்களுக்குள் மட்டும் ஐந்து பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை நிலைமையின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
எனினும், இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் தொடர் கொலையாளி ஒருவர் இருப்பதாக இதுவரை பொலிஸார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. வழக்குகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் காரணமாக அவை தொடர்புடையவையா என்பதை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவருக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் சம்பவங்களால் எகுர்ஹுலேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அதேவேளை, தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலைகள் தொடர்பான நீண்டகால பிரச்சினையும் இந்தச் சம்பவங்களால் மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, எகுர்ஹுலேனி கொலைகள் தொடர்பான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குற்றங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











