
தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!
தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 362 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்ரா 108 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 102 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளையும் காகிசோ ரபாடா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 363 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் டேவிட் மில்லர் 100 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் மிட்செல் சேன்ட்னர் 3 விக்கெட்டுகளையும் க்ளென் ப்ளிப்ஸ் மற்றும் மேட் ஹென்ரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றிக்கு அமைய, எதிர்வரும் 9ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியுடன் மோதவுள்ளது
