தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும், ஒரு மாணவர் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையிலும், பல்கலைக்கழக சாரதி ஒருவரும் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

இதேவேளை மறு அறிவித்தல் வரை விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் முதலாமாண்டு பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன், குறித்த மோதலானது, முதலாமாண்டு மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் அம்பாறை – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர் தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.