தென்கிழக்கு கொங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழப்பு

தென்கிழக்கு கொங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

லுவாலாபா மாகாணத்தில் உள்ள முலோண்டோவில் கலண்டோ சுரங்கத்திலேயே கடந்த சனிக்கிழமை பாலம் இடிந்து விழுந்துள்ளது.

“கடும்மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக அந்த இடத்தை அடைவதில் கடும் தடை இருந்தபோதிலும், சட்டவிரோதமாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் நுழைந்துள்ளனர்,” என மாநில உள்நாட்டு அமைச்சர் மயோண்டே தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு பாலத்திற்கு விரைந்த சுரங்கத் தொழிலாளர்களிடையே பீதியைத் தூண்டியது. இதன்போது பாலம் சரிந்து விழுந்ததால் அவர்கள் “ஒருவர் மேல் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதோடு, காயங்களுக்கு ஆளானார்கள்” என கொங்கோவின் கைவினைஞர், சிறிய அளவிலான சுரங்க அகழ்வு மற்றும் வழிகாட்டுதல் சேவையான SAEMAPE என்ற அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கம் நீண்ட காலமாகவே சுரங்கத் தொழிலாளர்களுக்கும், சுரங்கத் தளத்தின் சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் இடையிலான தகராறின் மையமாக இருந்து வருகிறது என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கான லித்தியம்-அயன் பற்றரிகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கனிமமான கோபால்ட்டை உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக கொங்கோ உள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் உற்பத்தியில் 80 சதவீதமானவை சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

குழந்தைத் தொழிலாளர், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக நாட்டின் சுரங்கத் தொழிலைப் பாதித்துள்ளன.

கனிம வளம் நிறைந்த கிழக்கு கொங்கோ பல தசாப்தங்களாக அரசாங்கப் படைகள் மற்றும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் வன்முறையால் பிளவுபட்டுள்ளது. இதில் ருவாண்டா ஆதரவு பெற்ற M23 உட்பட, அதன் சமீபத்திய மறுமலர்ச்சி மோதலை அதிகரித்துள்ளது, ஏற்கனவே கடுமையான மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கியுள்ளது.