
துறைசார் அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இயல்பு வாழ்க்கையை மீள ஏற்படுத்துவதற்கும் அனைத்து நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம்
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுவதற்கு அவசியமான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மீளமைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இதற்காக நன்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை தேவை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அனர்த்தத்திற்குப் பின்னர் இயல்பு வாழ்க்கையை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகள், குடிநீர் வசதிகள், நீர்ப்பாசன மறுமைப்பு மற்றும் ரயில் பாதை மற்றும் ரயில் சேவைகளை மீளமைப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அனர்த்தத்தின் பின்னர் அழிந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதன் மூலம் போக்குவரத்துக் கட்டமைப்பை மீளமைக்க துரித வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்பட்டது. இதற்காக, சேதமடைந்த அனைத்து வீதிகளையும் அடையாளம் காண்பது மற்றும் ரயில் பாதைகள் மற்றும் சேவைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் புனரமைப்பதில் முதல் முன்னெடுப்பாக சேதத்தை மதிப்பிடுவதும், அதே நேரத்தில், புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வளங்களை (பௌதீக மற்றும் மனித வளங்கள்) அடையாளம் காண்பதும் ஆகும் என்று ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இந்த நடவடிக்கைகளில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதன் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
