துசித ஹல்லொலுவவிற்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த துசித ஹல்லொலுவவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும், சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
அண்மையில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நாரஹேன்பிட்டி பகுதியில் தான் பயணித்த வாகனத்தின் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி கொழும்பு குற்றவியல் பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார்.
