தீ மூட்டி தன்னுயிரை மாய்க்க சிறுவன் முயற்சி

நுவரெலியா – பொகவந்தலாவ, பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 12 வயது சிறுவன் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

ஜெப்பல்டன் என்.சீ. தோட்டப் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இதன் போது தனக்கு தானே தீ மூட்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம்தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் சண்டை போட்டு கொள்வதாகவும் சம்பவ தினத்தன்று இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாயாரை தாக்கினால் தான் தீ வைத்துக் கொள்வதாக கூறி எச்சரித்த சிறுவன், தனக்கு தானே தீ வைத்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், பொகவந்தலாவ, மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அச்சிறுவன், பாடசாலைக்கு செல்வதில்லை என்றும், இடைவிலகிய மாணவன் என்றும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.