தீயில் எரிந்து உயிரிழந்த உதவிப் பிரதேச செயலாளரின் சடலத்தை புதைக்குமாறு உத்தரவு!

-யாழ் நிருபர்-

தீயில் எரிந்த சாவகச்சேரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீர்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த, சதீஸ் தமிழினி (வயது 34) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் 6 மாத கர்ப்பிணியான குறித்த பெண், கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, நுளம்பு திரியை பற்ற வைத்த பின்னர், தீக்குச்சியை தவறுதலாக அருகில் உள்ள மண்ணெண்ணெய் கொள்கலன் மீது போட்டதால், அதன்மூலம் ஏற்பட்ட தீ விபத்தில் தான் சிக்கியதாக, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தொடர்ச்சியாக 9 தினங்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவரது சிசுவையேனும் உயிருடன் காப்பாற்றுவதற்கு,  வைத்தியர்கள் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி, சிசுவுடன் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.