திஸ்ஸ விகாரைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்-

 

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே 03 ஆம் திகதி தொடக்கம் எதிர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் வேளை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது நாளை செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிவரை சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு அண்மையில் இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், அக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.