திருமலை மாவட்ட செயலாளராக பதவி ஏற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தனது கடமைகளைப் பொறுப்பேற்று நேற்று வெள்ளிக்கிழமை ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு இதே நாளில் திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாவட்ட நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பல்வேறு துறைகளில் திட்டமிட்ட முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் வழிநடத்தலின் கீழ் மாவட்ட செயலகத்தின் நிர்வாகச் செயல்பாடுகள் மேலும் வலுப்பெற்றதுடன், அரசாங்க சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் கிடைக்கச் செய்வதற்கான பல நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள், சமூக நல மேம்பாட்டு திட்டங்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் நோக்கில் மனுக்கள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தனது கடமைகளைப் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் இணைந்து சிறப்பான முறையில் இந்நாளை நினைவுகூர்ந்து கொண்டாடினர்.