திருட்டில் மோதிரத்தை இழந்த மூதாட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
ஒட்டாவாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி டெர்ரி தாம்சன், தன்னுடைய வைர மோதிரத்தை திருட்டில் இழந்ததையடுத்து, அதற்குப் பதிலாக புதிய மோதிரம் ஒன்று நகைகடையொன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில், தாம்சன் தனது ஓய்வு இல்லத்தின் வெளியே நின்றிருந்தபோது, ஒரு அந்நியர் போலி நகைகளை அணிவித்து, அவரது மறைந்த கணவர் பரிசளித்த மதிப்புமிக்க மோதிரத்தை திருடிச் சென்றிருந்தார்.
இந்த பெறுமதி மிக்க மோதிரம் களவாடப்பட்ட சம்பவம் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை பார்வையிட்ட லா மாய்சன் டோர் நகைக்கடையின் உரிமையாளர் பிரென்ட் ஹார்டன், அவரது மகளின் கோரிக்கைக்கு அமைய புதிய மோதிரமொன்றை மூதாட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
நாங்கள் அந்த மோதிரத்தை சிறிது மேம்படுத்தியுள்ளோம். அதில் அக்வாமெரைன் கல், இரண்டு செயற்கை வைரங்கள் மற்றும் 14 கரட் தங்கம் பயன்படுத்தியுள்ளோம். மேலும், அதில் தாம்சனின் மறைந்த கணவர் எழுதியிருந்த ‘With love, Bill’ என்ற வரியையும் பொறித்துள்ளோம் என நகைக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மோதிரத்தின் மதிப்பு 6,000 கனேடிய டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நகைகடை உரிமையாளர் மற்றும் அவரது மகளுக்கு தாம்சன் மற்றும் அவரது மகள் ஆகியோர் தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.