திருக்கோவில் : சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு
-கல்முனை நிருபர்-
வடக்கு கிழக்கு சமூக இயக்கம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கின்ற அநீதிகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திய போராட்டங்கள் இடம்பெற்றது.
இந்தநிலையில் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான நீதி ,தமிழர் தேசிச நில அபகரிப்புகள், தமிழர் தேச வளச் சுரண்டல்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அத்துமீறல்கள், போன்ற பல விடயங்களுக்கு சர்வதேச நீதியை வலியுறுத்துகின்ற போராட்டத்தில் அதன் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பிரதீபன், காந்தன், யசோதரன் உள்ளிட்டவர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட சங்கத் தலைவி தம்பிராஜா செல்வராணி மற்றும் நிர்வாகத்தினர், அம்பாறை மாவட்ட இலங்கை தமிழ அரசுக் கட்சியின் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாச உதவி தவிசாளர் ரகுபதி மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் ஆகியோரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழ்,முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததோடு பெருமளவிலான இளைஞர்களும் பொதுமக்களும் இதற்கு ஆதரவு உதவித்து தங்களுடைய கையெழுத்துக்களையும் வழங்கி இருந்தனர்.