
திருகோணமலை மூதூர் பஸ் சேவை கிண்ணியா ஆலங்கேணி ஊடாக செல்ல அனுமதி
திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையிலான பஸ் சேவையினை, புஹாரி சந்தி ஆலங்கேணி ஊடாக இடம்பெறச் செய்வதற்கான ஆலோசனை கூட்டம், கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம் மஹ்தி தலைமையில் நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண தனியார் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அதன் உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர், நகர சபையின் பிரதி தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர் ராபி, பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் செயலாளர் ரைஸ்டீன், கிண்ணியா போக்குவரத்து போலீஸ் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதிநிதி, வீதி அபிவருத்தி திணைக்கள பிரதிநிதி, தனியார் பஸ் உரிமையாளர்கள், கிண்ணியா இ.போ.ச நிலையப் பொறுப்பதிகாரி, சமூக நிறுவன தலைவர்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலை தொடர்ந்து எதிர்வரும் 06 ஆம் திகதியில் இருந்து தீர்மானிக்கப்பட்ட புதிய பாதை மார்க்கத்தில் பஸ் பயணத்தை ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நலன் கருதி, குறித்த பொது போக்குவரத்து சேவை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் பயணிகள் பெரும் நன்மையடைவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
