திருகோணமலை மீனவர் கைகலப்பு சம்பவம் : ஒருவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை திருக்கடலூர்-விஜிதபுர மீனவர் கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை ICCPR குற்றச்சாட்டில், எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த சந்தேக நபரை ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை- திருக்கடலூர் மற்றும் விஜிதபுர பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் தலைமையக பொலிஸாரினால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முதலாவது வழக்கில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் எட்டு சந்தேக நபர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருந்த போதிலும் கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரான திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் பிரதீபன் (35வயது) என்ற சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை தலைமையக பொலிஸார் சர்வதேச மற்றும் அரசியல் குடியியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் 2007ம் ஆண்டு 56-ஆம் இலக்க மூன்றாம் பிரிவின் கீழ் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே நேரம் குறித்த சந்தேக நபருக்கு பல குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டிருந்த நிலையில் தேசிய இன ரீதியான அல்லது மத ரீதியான வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரம் உள்ளது எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன் முழுமையான ஆதாரங்கள் போதுமானது அல்ல என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு நியாயமான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவுறுத்தல் வழங்கினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்