
திருகோணமலை நகரில் வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை நகரில் வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியற்ற வீதியோர வியாபாரத்தை உடனடியாக நிறுத்த அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வீதியோர வியாபாரத்தில் ஈடுபடுபவர்களினால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
கொவிட் தொற்று நிலவிய 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை நகரின் பல பகுதிகளில் பலர் வீதியோர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள் இருப்பினும் அது வழமைக்கு திரும்பிய பின்னரும் பல பகுதிகளில் வீதியோர விற்பனையில் பலர் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக நகரின் போக்குவரத்து நெரிசல் கூடிய பிரதான வீதிகளிலும் மரக்கறிகள், மீன் உட்பட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகின்றன.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

